பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஜாராவின் நிறுவனர் அமான்சியோ ஒர்டேகா, அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள 51 மாடி அலுவலகக் கோபுரத்தை சுமார் ரூ.5,223 கோடிக்கு வாங்கியுள்ளார்.
ஸ்பெயின் தொழிலதிபரான இவரது குடும்ப முதலீட்டு நிறுவனமான ‘பொன்டெகதேயா இன்வெர்சியோனெஸ்’, இந்தக் கட்டிடத்தை வாங்கியுள்ளது. இதன் பரிவர்த்தனை மதிப்பு சுமார் 55 கோடி அமெரிக்க டாலராகும். சிகாகோவின் முக்கிய வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ‘ஒன் நார்த் வாக்கர்’ என்ற இந்தக் கோபுரம், நகரின் குறிப்பிடத்தக்க அலுவலகக் கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய அலுவலகச் சொத்து விற்பனைகளில் இப்பரிவர்த்தனையும் இடம்பெற்றுள்ளது.இந்தக் கட்டிடத்தில் பன்னாட்டு நிறுவனங்களான பி.டபிள்யூ.சி., யூபிஎஸ் குழுமம் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் உள்ளிட்டவை வாடகை அடிப்படையில் அலுவலகங்களை நடத்தி வருகின்றன. உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் மதிப்புமிக்க சொத்துகளை வாங்கிவரும் ஒர்டேகா, இந்த முதலீட்டின் மூலம் தனது சர்வதேச ரியல் எஸ்டேட் சொத்துத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஆடை வர்த்தகத்தில் ஈட்டிய செல்வத்தை வணிகக் கட்டிடங்களில் முதலீடு செய்வதை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.